ஓட ஓட தூரம் கொறையல..

கர்நாடகாவில் துணி வியாபாரத்திற்கு போய் வந்த நண்பன் சிவா வரும்போது "கர்நாடகா பாட்டில்" இரண்டு வாங்கிவந்தான். அதுவரை ஊள்ளூர் சரக்குகளை மட்டுமே ருசித்த நண்பர்கள் இந்த "திறப்புவிழாவுக்கு" பாண்டிசேரி தமிழ்நாடு என்று இரண்டு இடங்களில் புழங்கிய சீனியாரிட்டி அடிப்படையில் என்னை தேர்ந்தெடுத்தார்கள். மூணாறு மலைச்சாலையில் ஆரம்பித்தோம். நான்கு நண்பர்கள் இரண்டு பாட்டில்கள். ருசியை சிலாகித்தவாறே பருகினோம். "என்ன இருந்தாலும் கர்நாடகா கர்நாடகா தான், மச்சி அன்னிக்கி பாண்டியிலிருந்து ஒரு ஸ்காட்ச் வாங்கிவந்தியே அது கூட இந்த டேஸ்ட் இல்ல மச்சி. சூப்பர் சிவா" என்றார்கள். நான் வாங்கிவந்தபோதும் இதே டயலாக் தான் சொன்னார்கள் இந்த உயிர் நண்பர்கள். எல்லாம் முடிந்து காலி பாட்டில்களை பாதுகாப்பாக உருட்டிவிட்டு கிளம்பும்போது மணி எட்டு. கீழிறங்கி போடிக்கு வந்து சிவா ஒரு நண்பனை இறக்கிவிட சில்லமரத்துப்பட்டி சென்று விட்டான். நானும் இன்னொரு சில்லமரத்துப்பட்டி நண்பனும் ஒரு வண்டியில் கிளம்பினோம். நல்ல போதை இருந்தது. வீட்டில் கண்டுபிடிக்காமல் இருக்க ஆளுக்கு ஒரு பாஸ்பாஸ் வாங்கிக்கொண்டு இடையில் ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு சிறு பாலத்தில் அமர்ந்து ஆளுக்கொரு கிங்க்ஸ் பற்றவைத்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு பாஸ்பாஸ் போட்டு பரஸ்பரம் ஊதிக்காட்டிகொண்டோம். அவனை வீட்டருகில் இறக்கிவிட்டு வீடுவந்தேன். கீழே எல்லோரும் தூங்கிஇருந்தார்கள். மாடி கதவு திறந்திருந்தது. மேலே சென்று லோ பேட்டரி காட்டிய மொபைலை சார்ஜ் போடக்கூட முடியாமல் அயர்ந்து தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை எட்டுமணிக்கு எழுந்து கீழே வந்தேன். ஏன்டா ராத்திரி லேட்டு என்று கேட்ட அம்மா "உன் போன் என்னாச்சுடா, முருகேசன் லேன்ட்லைனுக்கு போன் பண்ணினான், நீ தூங்கிட்டிருக்கன்னு சொல்லிட்டேன். என்னன்னு கேட்டுக்கோ" என்றார். திருப்பி அவனுக்கு கூப்பிட்டால் பிஸியாக இருந்தது. குளித்து முடித்து பத்து மணியை போல் போடிக்கு வந்தேன். பஸ் ஸ்டாண்டில் அஷோக் எதிர்ப்பட்டான். என்னைப்பர்த்ததும் "சிவாவை பாத்தியாடா" என்றான் "இல்லையே ஏன்" என்றேன். "போடா இடியட். ராத்திரி அவனுக்கு பெரிய ஆக்ஸிடென்ட். தீபம் கிளினிக்ல சேத்திருக்கு" என்றதும் பயங்கர ஷாக். "ராத்திரி முருகேசனை இறக்கிவிட சில்லமரத்துப்பட்டி போனவன், திரும்ப வரும்போது இடைல ஒரு பஸ் பின்னாடி லேசா முட்டிடுச்சி..பயத்தில வண்டிய முறுக்கியிருக்கான். பாலத்தைதாண்டி வண்டி செங்குத்தா கீழ விழுந்திடுச்சி. அப்ப விழுந்தவன் மூணு மணிவரைக்கும் அங்கேயே விழுந்து கெடக்கான். ஒரு பால் லாரி வந்து பாத்தப்பத்தான் தெரிஞ்சது. லாரி டிரைவர் தான் போன் பண்ணினார்.இல்லேன்னா யாருக்கும் தெரிஞ்சிருக்காது. பாவம் செத்திருப்பான்." என்றான். அவசரமாக அவனைப் போய் பார்த்தேன். முகமெல்லாம் வீங்கி பல ரத்த காயங்களுடன் அமைதியாக படுத்துக்கிடந்தான். அப்போதுதான் சட்டென நினைவில் வந்தது. அவன் விழுந்துகிடந்த அதே பாலத்தின் திட்டில் தான் ராத்திரி அரைமணிநேரம் உட்கார்ந்து நானும் ஒரு நண்பனும் தம்மடித்தவாறே பேசிக்கொண்டிருந்தோம்! அப்போது இருட்டில் கேட்காத சிவாவின் முனகல் சத்தம், இப்போது ரத்த வாசனையுடன் கேட்டது.

Comments

Popular posts from this blog

அறிமுகம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!