ஏய் நில்லு லைசென்ஸ் இருக்கா?

இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் எவரேனும் ட்ராபிக் போலீசிடம் பிடிபடாமல் வந்திருக்கிறோமா?
மூன்று வண்டியில் நான்கு மிலிட்டரி ஃபுல் பாட்டில்களுடன் ஐந்து நண்பர்கள் கொடைக்கானல் கிளம்பினோம். வழிநெடுக ஒவ்வொரு வளைவிலும் தாகம் தீர்த்துக்கொண்டோம். மூஞ்சிக்கல் நெருங்கும் முன்பே இரண்டு பாட்டில் காலி. இரவு ஏழுமணிவரை லேக். பின் நான்கு மணிநேர இடைவெளியில் தெளியவிருந்த போதையை மற்றுமொரு பாட்டில் துணைகொண்டு தடுத்தோம். அறையில் சிதறிக்கிடந்த சிப்ஸ் துகள்களுக்கு நடுவே படுத்துறங்கினோம். சாதாரண போர்வையே போதுமானதாய் இருந்தது. மீதிக்குளிருக்கு உள்ளிருந்த திரவம் உபகாரமாய் இருந்தது. ஒருவனுக்கு ஆறு மணிக்கு முழிப்பு வந்தவுடன் பதட்டமாய் எல்லோரையும் எழுப்பினான். அரைத்தூக்கத்தில் அலங்கோலமாய் எழுந்து விசாரித்தோம். "விடிஞ்சிடுச்சுடா" என்றான் அதிகாலையை ஆர்வமாய் ரசித்தபடி. "அதுக்கு?" "டேய் இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்" என கட்டிலுக்கடியில் கிடந்த ஒருபாட்டிலை எடுத்தான் முதலிரவுக்கு மூர்க்கமாக தயாராகும் ஒரு புதுமாப்பிள்ளை போல. "டேய்...உன் வாழ்க்கையில சரக்கை பாத்ததே இல்லியா?" என்று கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் கண்ணாடி டம்ளர்களை வரிசைப்படுத்தினான். இரண்டுபேர்மட்டும் அசுவாரஸ்யமாய் விலகி, வெறும் வயிற்றில் சிகரெட்டுகளை மட்டும் ஊதித்தள்ளிவிட்டு குளிரை அணைத்துக்கொண்டோம். பாதி காலியான பாட்டிலை வண்டியில் இட்டுக்கொண்டு "குணா பாறை" கிளம்பினோம். பில்லர் ராக் முன்பாக மூன்று ட்ராபிக் போலீஸ்கள் இரு சக்கரம், நான்கு சக்கரம் என பேதமில்லாமல் "சோதனை"யில் ஈடுபட்டிருந்தார்கள். அநேகமாக அவர்களுக்கு முதல்போணி நாங்களாய் இருக்கவேண்டும் என்ற நினைப்பை ஒரு காவலரின் மஞ்சள் கோட்டினுள் கத்தை கத்தையாக சீரற்று கிடந்த ரூபாய் நோட்டுகள் பொய்யாக்கியது.
"எந்த ஊரு" கேள்வியை முடிக்கும்முன்பே அவர்களே ரெஜிஸ் நம்பரை பார்த்து "தேனியா?" என்றார்கள்.
"ஆமாங்க" என்றோம். "நாங்களும் மதுரை திருடங்கதான்" என்றார் மஞ்சள் கோட் அணிந்த போலீஸ். பெட்ரோல் தீர்ந்துபோன ஜெனரேட்டர் போல சலனமில்லாமல் நின்றிருந்தோம். "இப்படி ஒன்னுமே பேசலேன்னா எப்படி? எல்லாரும் டி.டி. கோர்ட்டுக்கு போனா மூவாயிரம், இங்கன்னே ஆயிரம்! எடுக்கறீங்களா இல்லை வண்டியை விட்டுட்டு போறீங்களா?" என்றார் மொத்த விற்பனை ஏஜென்ட்டு போல. இரண்டு தவணை பேச்சுவார்த்தைக்கப்புறம் ஐநூறு கொடுத்து மீண்டோம். வண்டியை கிளப்பிய வேகத்தில் "மச்சான் இப்பவே விஜிலேன்சுக்கு போன் பண்ணுவோம்டா" என்றான் முக்கால் போதை நண்பன். எஸ்.ஏ.சி படத்தில் விஜயகாந்த் பேசும் அத்தனை வசனத்தையும் பிசிறில்லாமல் ஒப்பித்தான் கால்போதை நண்பன். இந்த அநியாயத்தை தட்டிக்கேட்டே ஆகவேண்டும் என்று தீர்மானித்து ஒரு எஸ்டிடி பூத் அருகே வண்டியை நிறுத்தினோம். "மாப்ள, விஜிலென்ஸ் நம்பர் சொல்றா" என்று ஆவேசமாய் கேட்ட நண்பன் ஐந்து வினாடி அவகாசத்தில் எதிர்பார்த்த பதில் கிடைக்காததால் நான்கு கடை தள்ளியிருந்த Wine Shop க்குள் நுழைந்தான். மீதி நால்வரும் அவனை பின்தொடர்ந்தோம்.

Comments

Popular posts from this blog

அறிமுகம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!