எது நடந்ததோ அது...

பாப்புசாமி ஐயா தான் எங்கள் ஊரில் முதன்முதலில் பெரிய அளவில் பலசரக்கு கடை வைத்தார். அதுவரை ஒன்றிரண்டு பெட்டிக்கடை மட்டுமே இருந்தது. சுற்றுப்பட்டு கிராமங்களில் உள்ள சின்ன சின்ன தேநீர்க்கடைக்காரர்கள், தையல்காரர்கள், பணியாரம் சுட்டு விற்கும் ஆச்சிகள், மற்றும் அன்றாடங்காச்சிகள் என அந்த கடையின் வாடிக்கையாளர்கள் மிகுந்திருந்தனர். விற்பனை மட்டுமல்ல, விவசாயிகளின் பருத்தி, ஆமணக்கு விதைகள், சிறுவர்கள் பொறுக்கிவரும் வேப்பங்கொட்டைகள், பழைய நோட்டு புத்தகங்கள் என வாங்கவும் செய்வார். அமோகமான வியாபாரத்திற்கு உதவிக்கு ஐ.டி.ஐ முடித்து ஊர்திரும்பிய தன் மூத்த மகன் ராஜாவையே உதவிக்கு வைத்துக்கொண்டார். அதற்குப்பின் ராஜாதான் அங்கு ராஜா! சிரித்த முகத்துடன் யாரையும் கடுப்பேற்றாமல் மென்மையாக வியாபாரம் பார்க்கும் அவன் உத்தியை ஊரே ரசித்தது. அவனுக்கு செல்லப் பெயர்கள் வைத்தார்கள். நாளடைவில் மொத்த விற்பனை கடை போலானது. பாப்புசாமி கொள்முதல் செய்வதை மட்டும் பார்த்துக்கொண்டார். சாயங்கால வேளைகளில் கூட்டம் கண்ணைக்கட்டும். ஒற்றை ஆளாக சமாளிப்பான் ராஜா. கூலி வேலைக்கு சென்று திரும்புபவர்கள் கூலிப் பணத்தை அங்குதான் உடைப்பார்கள். அப்போதெல்லாம் டிஜிடல் தராசுகள் புழக்கமில்லை! கையில்தான் நிறுக்கவேண்டும். அல்லது நாழியில் அளந்து போடவேண்டும். ஊருக்கே படியளந்த ராஜா, தன் உணவினை ஒரு யோகியைப்போல் பராமரித்தான். ஒருவேளை உணவு மட்டும்தான். ஒரு நண்பரின் பரிந்துரை பேரில் பாப்புசாமி கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடிவெடுத்தார். சல்லிசாக கிடைத்த நிலத்தில் தென்னை நட்டார். ஊடாக பருத்தி பயிரிட்டார். விவசாயம், பலசரக்கு இரண்டையும் பராமரிக்க ராஜா திணறினான். அந்த திணறலை சிலர் உபயோகப்படுத்திக் கொண்டார்கள். அங்கே வீழ்ந்தார் பாப்புசாமி. அவரது வளர்சியினைக்கண்டு நிறைய பேர் கடன் கொடுத்திருந்தார்கள். இங்கே விவசாயத்தில் நட்டக்கணக்கு காட்டப்பட்டது. ஆரம்பத்தில் கடிக்காத நஷ்டம் நாளடைவில் கடிக்க ஆரம்பித்தது. கடைப்பணமும் கொஞ்சம் கரைந்தது. ராஜா உச்சரித்துப் பார்த்தான். அவருக்கு மானப்பிரச்சினையானது. எடுத்த தொழிலை பாதியில் விட கௌரவம் தடுத்தது. இரண்டாண்டுக்குள் அத்தனையும் கடனில் மூழ்கியது. சேமிப்பையெல்லாம் கரைத்துப்பார்த்தார். கடன் கொடுத்தவர்கள் ஒவ்வொரு சொத்தாக எழுதிவாங்கிக்கொண்டனர். சில கடன் காரர்களுக்கு பதில் சொல்லமுடியாத வேளையில் ராஜா தலைமறைவாகக் கூட இருக்கவேண்டியிருந்தது. எல்லா சொத்துக்களையும் இழந்து பாப்புசாமி மனைவியுடன் ஊரைவிட்டு வெளியேறினார். ராஜாவின் மனைவி, குழந்தைகளுடன் அவள் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாள். அந்த ஊரை விட்டு வெளியேற மனமில்லாத ராஜா நான்கு நாட்கள் அந்த ஊரிலேயே பட்டினியுடன் இருந்தான். அவன் கடையை சுற்றி உள்ள வீடுகளில் அவனை சாப்பிட அழைத்தார்கள். மறுத்து விட்டான். பாப்புசாமியின் நண்பர்கள் சிலர் (வள்ளலார் அடிகளார்கள்) ஊருக்கு வந்தார்கள். நான்கு நாட்கள் பட்டினியை பொறுத்துக்கொண்ட ராஜா அப்போது பக்கத்து தெருவில் அவனது முன்னாள் வாடிக்கையாளர் ஒருவரிடம் கொஞ்சம் அரிசி கடன் கேட்டான். எத்தனயோ படி அரிசிகளை அவனிடம் கடனாக வாங்கியவள் கண்ணீருடன் அரைப்படி அரிசியை எடுத்துக்கொண்டு வந்தாள். ராஜா எந்த சலனமும் இல்லாமல் அதே சிரித்த முகத்துடன் தனது வேட்டியில் அந்த அரிசியை ஏந்திக்கொண்டான்.

Comments

Popular posts from this blog

அறிமுகம்

நிழற்படம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!