பூர்வ ஜென்ம...

நண்பரின் சர்விஸ் சென்டரின் முன்நின்று பேசிக்கொண்டிருந்தபோது நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா என்னை அருகில்வந்து சன்னமான குரலில் அழைத்தார். "தம்பி நீங்க ரத்தினம் அக்கா பையன் தானே, என்னை உங்களுக்கு தெரியாது ஆனா, உங்களை எனக்குதெரியும்..ஒரு உதவி." என்று ஆரம்பித்தார். "சொல்லுங்க என்ன பண்ணனும்" "பக்கத்துலதான் வீடு ஒரு எட்டு வந்தா கொஞ்சம் உபயோகமா இருக்கும்" "என்ன விஷயம் சொல்லுங்க வாரேன்"
"என்ககூடப்போறந்தவங்க பசங்க யாரும் இல்லை.மூனும் பொண்ணுங்க, கொஞ்சநேரம் முன்னாடி எங்கப்பா இறந்துட்டார் என்ன பண்றதுன்னு தெரியலை குளிப்பாட்டி சேர்ல வைக்கணும், சொந்தங்களுக்கு சொல்லிவிட்ருக்கு, அவங்க வாறதுக்கு மதியம் ஆயிடும் அதுவரைக்கும் அப்படியே வச்சிருக்க முடியாது அதான் கொஞ்சம் உதவி பண்ணீங்கன்னா..." என்றார் துளி சலனமின்றி. எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஒரு பிரேதத்தை குளிப்பாட்ட வேண்டுமா தனியாளாக! கைகால் உதற ஆரம்பித்தது. என்னை வேறு தெரியும் என்று சொல்லிவிட்டார்.அம்மாவின் பெயரை சொல்கிறார். ஒருவேளை அமாவுக்கு தெரிந்தவராக இருக்குமோ என் யோசித்தவாறே சென்றேன். ஒரு அகண்ட வீட்டினுள் வராண்டாவில் கிடந்தார் தொண்ணூறு வயது மதிக்கத்தக்க மனிதர் கருத்த, நன்றாக உழைத்த தேகம். பார்த்துகொண்டிருக்கும்போதே இன்னொரு நபர் வீட்டினுள் வந்தார்.என்னை அழைத்ததுபோலவே அழைத்து வந்திருக்கவேண்டும். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இருவருமாக தூக்கி கட்டிலில் போட்டோம் மூன்று மகள்களும் தண்ணீர் ஊற்ற சம்மதித்தனர். இடுப்பில் இருந்த வேஷ்டியை உருவவேண்டும். அப்பாவின் நிர்வாணம் அவர்களை சலனப்படுத்தவே இல்லை. பெற்ற மகள்கள்முன் அம்மணமாய் கிடக்க அந்த சடலமும் சங்கடப்படவில்லை. தூக்கி விபூதிவைத்து, கால் கட்டை விரல்களை கட்ட கயிறு தேவைப்பட்டது. அவரின் ஒரு வேஷ்டியை எடுத்து மூத்தமகள் கொஞ்சம் கொஞ்சம் பேண்டேஜ் துணியைப்போல் கிழித்து தந்துகொண்டிருந்தார். எவரின் முகத்திலும் சோகம் துளியில்லை. சொட்டுக்கண்ணீர் இல்லை. நாற்காலியில் கிடத்திவிட்டு வெளியேறும் சமயம் ஒவ்வொருவாராய் வரத்துவங்கினர். இத்தனை வேலையில் அவர்களின் பெயர்களை தெரிந்துகொள்ளவே இல்லை. வெளியே வந்து ஒருவரிடம் விசாரித்துவிட்டு வீடு மீண்டேன். மறுநாள் என் பாட்டியிடம் இதை சொன்னபோது அவள் கண்கள் குளமாகியிருந்தது. விசாரித்ததில் அந்த முதியவரின் முதல் மனைவி என் தாத்தாவின் தங்கையாம். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் மறுமணம் செய்ததில் எங்கள் தாத்தாவுக்கும் அந்த முதியவருக்கும் மன முறிவாகி பேசுவதில்லையாம். இரண்டாம் மனைவியில் பிள்ளைகள்தான் அந்த மூன்று மகள்கள். இரண்டுதலைமுறைகளாய் தொடர்பற்றுப்போன ஒரு உறவுமுறையை ஒரு மரணம் எத்தனை நைச்சியமாய் இணைத்திருக்கிறது என்று ஆச்சர்யமாய் யோசித்துக்க்கொண்டிருந்தாள் பாட்டி. வாழ்க்கைதான் எத்தனை சுவாரஸ்யம் நிரம்பியது? எத்தனை புதிர்கள் நிரம்பியது? இந்த ஆச்சர்யங்கள் வாழ்வின்மீது இன்னமும் நெருக்கம்கொள்ள வைக்கிறது. உறவுகளின் மீதும்!

Comments

Post a Comment

Popular posts from this blog

SURVIVAL OF THE FITTEST