SURVIVAL OF THE FITTEST

இப்போதெல்லாம் சுமாரான உணவகங்களில் கூட சாப்பிட்டு முடித்ததும் புத்தகம் போன்ற அட்டைகளில்தான் சாப்பிட்ட ரசீது வைக்கிறார்கள். அனேக சிப்பந்திகளும் மேலைய நாட்டினர் போல் ஒரே நிற உடுப்பணிந்து பவ்யமாக தமிழக அமைச்சர்கள் போல் நின்றுகொண்டுதான் கட்டளை கோருகிறார்கள்.
எனக்குத்தெரிந்த உள்ளூர் உணவகம் ஒன்றில் பலவருடம் பரிமாறுபவராக சிவராஜ் என்பவர் இருக்கிறார். அறுபதைக்கடந்த அவர் இதற்குமுன் இருந்த உணவகத்தை இழுத்து மூடிவிட்டதால் இப்போது இங்கிருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்துடன் ஊக்கத்தொகை தருகிறவர் தராதவர் என எந்த பேதமும் இன்றிவாடிக்கையாளர்களை எதிர்கொள்கிறவர். ரசீதை தருவதே சூடம் காட்டும்போது இடது கைவிரல்கள் வலது கணுக்கை அருகேபடும்படி இருக்குமே அப்படி பக்தியுடன் தருவார். சிலர் ஊக்கத்தொகை கொடுக்கும்போதும் அப்படியேதான் பெற்றுக்கொள்வார். என் சிறு வயதிலிருந்தே அவரை அப்படித்தான் பார்த்துவருகிறேன். மீசை அரும்பாத வயதிலேயே அவருக்கு ஒரு முதலாளி தோரணையில் காசு கொடுத்திருக்கிறேன்.
ஒரு முறை அப்பாவுடன் போகும்போது சாப்பிட்டு முடித்ததும் அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்து நீண்டநேரம் கழித்து அவருக்கு ”காசெல்லாம் தராதப்பா” என்றோடு முடித்துக்கொண்டார் வேறேதும் சொல்லவில்லை!
ஒரு பெரும் வாழ்க்கையை எப்படி அவர் இதே பரிமாறுபவராக கழிக்கமுடிகிறது என பலமுறை யோசித்திருக்கிறேன். வாயிற்காவலனாக இருந்த பலர் இன்றைக்கு அதுபோல ஒரு பெரும் உணவகங்களுக்கு உரிமையாளர்கள். முன்னேற்றக்கதைகள், பணம் செய்யும் கலைகள் என எத்தனையோ படிக்கிறோம். நாளிதழ் போடுபவன் இன்றைக்கு அதே நாளிதளுக்கு வினியோகஸ்தனாக இருக்கிறான்.
இவருக்கு இவருடைய குடும்பம் எந்த நிர்பந்தமும் விதிக்கவில்லையா? பிள்ளைகளை பள்ளிக்கணுப்ப, அதற்கு கட்டணம் செலுத்த மேற்படிப்பிற்கு பணம் கட்ட, வாடகை வீட்டிலிருந்து சொந்தவீட்டுக்கு பணம் திரட்ட, பண்டிகைகளுக்கு உடுப்புகள் வாங்க, விருந்தாளிகளுக்கு விருந்தோம்ப, என எத்தனை செலவுகள் இருக்கிறது. அவர் பிள்ளைகள் படித்த காலகட்டத்தில் வேண்டுமானால் அரசுபள்ளிகளில் அவரால் கட்ட முடிந்த குறைந்த கட்டணம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நம் ஒவ்வொருவரையும் “வாழ்வில் நிலைத்திருக்க” எனும் வணிக வாழ்வு வாசகம் துரத்தோ துரத்தென்று துரத்துகிறது. அவரின் சொற்ப வருமானம் அவரது மனைவிக்கு ஒருநாளும் முகச்சுழிப்பிற்காளாக்க வில்லையா? அல்லது மனைவியும் ஏதேனும் ஒரு வேலை செய்து குடும்பம் நடக்கிறதா? அவரது பிள்ளைகளுக்கு எங்கள் வயதுதானிருக்க வேண்டும் . அவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்? வேறு உத்தியோகங்களுக்கு சென்று கைநிறைய பொருளீட்டி வசதியாக இருப்பார்களோ?
இப்போதும் பரிமாறிக்கொண்டிருக்கும் அவரது அம்மா அவரை எப்படி வளர்த்திருப்பார். அவர் குழந்தையாய் இருந்தபோது சோறூட்டிவிடும்போது தன் பிள்ளையை பற்றிய எதிர்பார்ப்பு எப்படி இருந்திருக்கும்? கொஞ்சும் போது செல்லமே ராஜாவே என்றுதானே கொஞ்சியிருப்பார்.இந்த பால்ய அனுபவத்தை அப்பா உடனிருந்து பார்த்ததாகவும் சிறுவயதில் ஒன்றாக விளையாடியதாகவும் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு ஊதுவத்தி கம்பெனியில் சிறுவயதில் ஒன்றாக வேலைசெய்தவர்களாம். திருமண வயது வந்ததும் அப்பாவும் அவருடன் சேர்ந்து சிலரும் வெளியே வந்து சிற்சில வணிகம் செய்து பிழைத்துக்கொண்டனர். அதில்தான் அப்பா பலசரக்குக்கடை வைத்துக்கொண்டார். அவருக்கு அதில் விருப்பம் இல்லையென அங்கேயே இருந்துவிட்டதாகவும், பின்னால் ஊதுவத்தி நிறுவனம் இழுத்துமூடப்பட்டபோதிருந்து ஒரு பரிமாறுபவராக தன் வாழ்வை துவக்கி இன்றும் அப்படியே இருக்கிறார். அவரது முகத்தில் எப்போதும் தென்படும் மகிழ்ச்சி அவர் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. எப்படி வாழவெண்டும் என்பதை ஒருவர் தானேதான் முடிவு செய்ய வேண்டும். அவர் செய்திருக்கிறார்.
இன்றைக்கு அந்த உணவகத்தில் மாலைச்சிற்றுண்டிக்குப் போனேன். சிரித்தபடியேதான் இருந்தார் சாப்பிட்டு முடித்ததும் அவருக்கு ஊக்கத்தொகை கொடுக்க கால்சட்டையின் பின்பக்கம் கைவிட்டேன். அம்மா இன்று காலை மதிய உணவு கட்டிக்கொடுத்த போது அம்மாவுக்கு அப்படி பணம் கொடுத்திருந்தால் எப்படி எதிர்வினையாற்றியிருப்பார் என ஒரு கனம் பதறி அவரைப்பார்த்து சிரிக்க முயற்சித்தேன் எப்போதும் போல சிரித்தவாரே தலை குனிந்து “ம்.. வாங்க தம்பி” என வலதுகையின் கணுவில் இடதுகையை விரித்து ஒட்டவைத்தவாரே ரசீதை கொடுத்தார் சாமிக்கு மனமுருகி அர்ச்சதை செய்யும் ஒரு புரோகிதரைப்போல!

Comments

Popular posts from this blog

அறிமுகம்

நிழற்படம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!