சோமு மாமாவின் காதல் கடிதங்கள்.
அப்பாவின் சரி வயது நண்பர் சோமசுந்தரம் மாமா. பால்யத்தில் இருந்து இடைவெளியே விழுந்துவிடாத பெரு நட்பு அவர்களுடையது. எங்களூர் மணல்வெளிகளில் அவர்கள் கழித்த காலம், காக்கா-குஞ்சு விளையாடிய வாகை மரங்கள் சாட்சியுடன் இன்னமும் முற்றி வளர்ந்து இருக்கின்றன. கிளைமுறிந்து விழுந்து கால்கள் பிசகிய நேரமும்,தெரியாமல் பட்ட கல்லடிகளில் இருவர் ரத்தமும் ஜாதியை தாண்டி ஒரே கல்லில் தோய்ந்திருக்கக்கூடும். இத்தனைக்கும் அவர்களுக்குள் எந்த உறவுமுறையையும் இட்டு அழைக்கும் பழக்கமில்லை. பாண்டிச்சேரியில் ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்சில் சோமு மாமாவுக்கு வேலை கிடைத்த சமயம்தான் அப்பா வெறுமையையும் தனிமையும் உணரத்தொடங்கினார். கிட்டத்தட்ட காதலியை பிரிந்த சோகம் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது. ஒரு வாரம் கழித்து வந்த இன்லேன்ட் கடிதத்தில் அப்பா சொக்கித்தான் போனார். அது அப்பாவுக்கு வந்த முதல் கடிதமாகக்கூட இருக்கலாம். ஃபோக்ஸ் கம்பியை கொக்கிபோல் வளைத்து விட்டத்தில் மாட்டி குத்திவைக்கப்பட்ட அந்த முதல் கடிதத்தில் குவிந்திருந்த எழுத்துக்கள் வீட்டை நிறைத்தன! அன்றைக்கு ஆரம்பித்த கடிதங்கள், வருடம் ஒருமுறை வரும் வீட்டுவரி ரசீதுக்கு இடையில் கடிதங்கள் கம்பியையும் நிறைத்தது. அன்புள்ள என ஆரம்பிக்கும் கடிதத்தில் நண்பன் எனும் சொல்லோ, அல்லது எந்த உறவுமுறையை சுட்டும் சொல்லோ இருக்காது பெயர், நீ, நான், என்பதைத்தாண்டி! பதினைந்து பைசாவில் ஆரம்பித்த கடிதம் எந்த விலையேற்றத்திலும் தடைபட்டதில்லை. முப்பத்தைந்து பைசா இருக்கையில் விலை ஏறும்சமயம் பத்து பைசாவுக்கு உபரியாக ஸ்டாம்ப் ஓட்டி அனுப்ப வேண்டியதிருக்கும்போதும் எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் அல்லது மாதவிலக்கு போல தொடர்ந்தது. மாமாவின் திருமணத்திற்கு பின்னும், அப்பாவுக்கு திருமணமாகி நாங்கள் பிறந்து பள்ளி முடிக்கும் வரை தொடர்ந்த அந்த கடிதங்கள் எப்போது நின்றது என துல்லியமாய் தெரியவில்லை. முற்றிலும் தொடர்பற்றுப்போய் ஒரு பதினைந்து வருடங்கள் இருக்கலாம். ஆஸ்துமா தொல்லையால் மில்லில் தொடர முடியாமல் ஓய்வு பெற்றது வரை தெரியும். அதற்குபின் எங்கு குடி போனார்கள் என விபரம் தெரியவில்லை. எல்லோரும் அலைபேசிக்கு மாறிவிட்டார்கள். அவர்களும் கைபேசி வைத்திருக்கக்கூடும். எண் தெரிந்தால்தானே அழைப்பதற்கு!
அவ்வப்போது அப்பாவிடம் மாமா பற்றி கேட்பேன். பதிலே வராது. வீட்டை இடித்து கட்டிய நேரம்கூட அந்த கடிதங்களை அழிக்க சம்மதிக்கவில்லை அப்பா. ஃபோக்ஸ் கம்பிகளிலும் குடைக்கம்பிகளிலும் குத்திவைக்கப்பட்ட கடிதங்களை ஒரு பாலித்தீன் பைகளில் போட்டு வைத்துக்கொண்டார்.
நேற்று அப்பா போன் செய்தார். பலவருடங்கள் கழித்து முந்தா நாள் ஒரு கடிதம் வந்ததாகவும் அதில் சோமு மாமா இறந்த தகவல் இருந்ததாகவும் அமைதியாக சொன்னார். திடீரென என்னுள் எந்த உணர்ச்சியும் எழவில்லை. அப்பா அழுததாக காட்டிக்கொள்ளவில்லை. உடனே அப்பாவை பார்க்கவேண்டும்போல் இருந்தது வண்டியை கிளப்பினேன். என்னைப்பார்த்ததும் அந்த கடிதத்தை கையில் தந்தார். நான்கைந்து வரிகளே இருந்தது. ஆஸ்துமா முற்றிய நிலையில் படிக்கையில் கிடந்தது இறந்துவிட்டதாகவும் இறப்பதற்கு சில நாட்கள் முன் இறந்ததும் அப்பாவிற்கு ஒரு தகவல் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் எழுதி இருந்தது. மகனோ மகளோ எழுதியிருக்கக்கூடும். நான்குவரி எழுத்துக்களும் சோமு மாமாவின் கையெழுத்தைப்போலவே இருந்தது! கடைக்கு முன்பக்கம் உப்புமூடைக்கு பக்கம், எப்போதும் அப்பாவுடன் அரட்டையடித்துக்கொண்டு இருக்கும் ஒரு அத்தை அந்நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். நீண்ட நேரம் அந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை!

Comments
Post a Comment