பருவமே புதிய சேட்டை பண்ணு...

பலசரக்கு கடையில் பொட்டலம் மடிக்க என்று குமுதம், விகடன், வாரமலர், நாளிதழ்கள் என்று சைஸ் வாரியாக கிலோகணக்கில் வாங்குவோம். அதில் அதிர்ஷ்ட வசமாக "பருவகாலம்" புத்தகங்களும் ஒளிந்திருக்கும். அப்பா சந்தைக்குப்போகும் சமயம் ஏதேச்சையாக தென்படும் அப்புத்தகங்களை நானும் அண்ணனும் தனித்தனியே நைசாக லவட்டிவிடுவோம். நான் அதை படிக்க ஏதுவான இடமாக உறவுக்கார பையனின் அறையை தேர்வு செய்தேன். அது ஒரு சாணம் மொழுகிய குடிசை. அவன் படிப்பதற்கென்றே ஒதுக்கப்பட்டது. பெரும்பாலும் அமைதியின் திருவுருமாய் இருப்பான். ஊரில் அவனுக்கு அடக்கமான பையன் என்ற பேர். பாடப்புத்தகங்களுக்கு நடுவில் "அந்த" புத்தகங்களை சொருகி எடுத்துக்கொண்டு அம்மாவிடம் செல்வன் வீட்டில் படிக்கப்போகிறேன் என்று சொல்லி அவன் அறைக்கு வந்து படிப்பேன். அரைநிர்வாண படங்களும், மாமியின் கதைகளும் காம ஹார்மோன்களை அதிகம் சுரக்கச்செயது, முகப்பருக்களை அதிகமாக்கியது. செல்வனுக்கு அதைப்படிப்பதில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. பாடமெல்லாம் படித்துமுடித்தது போக, கடைசியில் இரண்டு பக்கங்களை புரட்டினாலே அவனுக்கு வயிற்றை புரட்டும். எச்சில் உலர்ந்துவிடும். ஓரே அறையில் நாங்கள் சத்தமின்றி படிப்பதை ஊரே மெச்சியது. "அவனுங்களை பார்றா, எப்ப பாரு படிப்பு படிப்பு, எங்கயாவது வெளிய வாரானுங்களா?" என்று மக்குபயல்களுக்கு உதாரணம் காட்ட உபயோகமானோம். படித்து முடித்து விட்டு பாடப்புத்தகங்கள் வைக்கும் ட்ரன்க் பெட்டிக்கு அடியில் அதை வைத்துவிடுவோம். சிலமாதங்கள் கழித்து ஒரு தைத்திருநாளில் அம்மா வீடு கழுவுவதற்கு உதவி செய்துகொண்டிருந்தேன். செல்வனின் அம்மா மூர்க்கமான முகத்தோடு உள்ளே வந்தார். கையில் கால்வாசி நனைந்த "அந்த" புத்தகத்தை அம்மாவின் முன் நீட்டி "உம்புள்ள படிக்கிற புஸ்தகத்தை பார்" என்றார் உஷ்ணமாக. அதைப்படித்து முறுக்கேறிய நரம்புகள் அப்போது மெதுவாக தளர்ந்தது. ரத்தசோகை நோயாளிபோல் முகம்வெளுத்தது. அம்மாவின் முன் அந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள இயலவில்லை! செல்வனின் அம்மாவிடம் எதுவும் பேசவில்லை "சரி தாயி கண்டிக்கிறேன்" என்று சிம்பிளாக சொல்லிவிட்டாள். அங்கிருந்து நகரப்பார்த்தேன்! அம்மா எதிர்ப்பதும் காட்டாமல் விட்டுவிட்டாள். அவமானத்திலிருந்து மீள மணல் மேடு சென்று மணிக்கணக்கில் அடைக்கலமானேன். வீடு பிற்பகல் வீடுமீண்டதும் "ஏன்டா மதியம் சாப்பிடலை?" என்ற ஒற்றைகேள்வியில் தலைகுனிந்தேன். அதன்பின் அது பெரிய விஷயமாக விவாதிக்கப்படவில்லை என்பதில் நிறைய ஆறுதலாக இருந்தது. செல்வன் அதன்பின் ஆசிரியர் தேர்வுக்கு முயன்று, அரசால் தேர்வேழுதமுடியாமல் போன பல மானவார்களில் ஒருவனானான். அவனது சான்றிதழ்களும் கிடைக்கவில்லை ஒரு கார்பெண்டரிடம் உதவியாளனாக சேர்ந்ததாக அறிந்தேன். சமீபத்தில் அந்த கார்பெண்டர் தற்கொலைக்கு முயன்றதாக கேள்விப்பட்டு அதிர்ச்சியானேன். அதன் காரணத்தை அம்மாதான் சொன்னார். "அந்த கார்பெண்டர் பொண்டாட்டிய செல்வன் இழுத்துட்டு ஓடிட்டானாம்டா"

Comments

Popular posts from this blog

SURVIVAL OF THE FITTEST

பூர்வ ஜென்ம...