உதவி இயக்குனநண்பன் ஒருவனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டியதிருந்தது. தேனி பாஸ்போர்ட் அலுவலகம் சென்று விசாரித்ததில், பிறப்பு சான்றிதழ் அல்லது வயது நிரூபன சான்று அல்லது அதற்கு ஈடாக பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டார்கள். நண்பன் கோபாவேசத்தில் "சத்யா" கமல் போல என்றோ அவன் சான்றிதழ்களை கிழித்தெறிந்து விட்டிருந்தான். மாற்று சான்றிதழ் இருந்தால் தான் பா.போ.கிடைக்கும் என்ற நிலையில் டூப்ளிகேட் சான்றிதழ் வாங்க நாங்கள் படித்த பள்ளிக்கு சென்றோம். உதவி தலைமை ஆசிரியர் என் மாமா.நெருங்கிய உறவினர். அலுவலகத்தில் க்ளெர்க் எங்களுடன் படித்தவன். எங்கள் செட் ஆசிரியர்கள் சிலரும் இருந்தார்கள். சான்றிதழ் கிடைத்துவிடும் என்று பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. தலைமை ஆசிரியரிடம் விஷயத்தை சொன்னதும் "க்ளெர்க் நண்பனை விசாரித்தார். அவன் ஆமோத்தித்ததும் "அதற்கென்ன சின்ன ஃபார்மாலிட்டி தான், கொடுத்துட்டா போச்சு!" என்றார். கி.நண்பனும் பழைய நோட்டுக்களை புரட்ட ஆரம்பித்தான். விதி என் மாமா ரூபத்தில் த.ஆ அறைக்குள் நுழைந்தது. கதாநாயகன் திருமணத்தில் தாலிகட்டும் சமயம் வில்லன் ஏற்பாடு செய்த ஒரு இளம்பெண் "நிறுத்துங்க" என்று கத்துவது போல் அவசரமாக கையை அசைத்தவாறே உள்ளே வந்தார். "என்ன ஸார்...என்ன விஷயம், ஏன் வேண்டாங்கறீங்க" என்றார் த.ஆ. "ஸார் இந்தப்பையன் இங்க படிச்சவன்தான் எனக்கும் தெரியும், ஒரிஜினல் சர்டிபிகேட்டை வைத்து ஏதாவது ஒரு வேலை பார்த்துகொண்டு இப்போது புதிதாக சர்டிபிகேட் வாங்கி இன்னொரு கம்பெனிக்கு வேலைக்கு போகமாட்டான் என்பது என்ன நிச்சயம், அப்படி இரண்டு இடங்களில் வேலைபார்ப்பது சட்டப்படி குற்றமில்லையா?, நிஜத்தில் அது தொலைந்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து ரசீது வாங்கிவரசொல்லுங்கள்.அதன்பின் டூப்ளிகேட் கொடுக்கலாம்". என்று கிளைமாக்ஸ் கோர்ட் சீன்போல் வாதாடினார். அவர் அஞ்சியதில் ஒரு நியாயம் இருந்தது ஏனெனில் அந்த சமயம்தான் இரண்டு வட இந்திய சகோதரர்கள் ஓரே சான்றிதழை வைத்து இரண்டு இடங்களில் வேலை பார்த்த சம்பவம் செய்தியானது. எனக்கு தலைசுற்றல் வந்தது. "அடேய் நோன்னைகளா, ஒன்பதாம்வகுப்பு சான்றிதழுக்கு எவன்டா வேலை கொடுப்பான்?" ஏதோ டிகிரி சர்டிபிகேட் என்றால் அஞ்சுவது நியாயம் இருக்கிறது. க்ளைமாக்ஸ் வசனமாக நண்பன் பேசவிருந்த வசனத்தை, கொஞ்சம் ரத்த அழுத்தத்துடன் நான் பேசலானேன். மாமாவை சபித்து, படிக்காத பரவை முனியம்மா பாஸ்போர்ட் எடுத்த கதையினை சொல்லி, அண்ணாமலை ரஜினி போல் தொடைதட்டி "நாங்க எப்படி பாஸ்போர்ட் வாங்கிக்காட்றோம் பாருங்க" என்று சவால் விட்டு வெளியேறினோம்!
அதற்குப்பின் அணைப்பிள்ளையார் அணைக்கு சென்று இரண்டு "பீர்" களுடன் அடுத்து செய்யவேண்டியதை யோசித்தோம். இறுதியில் காவல் நிலையம் சென்று புகார்கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து மறுநாள் டிப்டாப்பாக கிளம்பினோம். முன்னெப்போதும் சென்றே இராத கா.நி த்தில் எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
நானும் நண்பனும் முதன்முதலில் காவல்நிலைய வாசலை மிதிக்கிறோம்! சொல்லிவைத்தாற்போல இருவரும் ஒரே நிற உடுப்பு. அரக்குநிற பேண்ட், வெள்ளை சட்டை. ராஜேஸ்குமார், சுஜாதா நாவல்கள், கொஞ்சம் சினிமா பிரபலங்கள் அறிமுகம் இவை போக கேப்டன் இன்ஸ்பெக்டரை மிரட்டும் சித்திரங்கள் எல்லாம் சேர்ந்து இது பெரிய காரியமே அல்ல எனும் உந்துதலை தந்திருந்தது. உள்ளே நுழைந்ததும் எதிர்ப்பட்டவர் ரைட்டர். ஒரு அறையில் உதவி ஆய்வாளர் கூட இருந்தார். நாங்கள் எவரையும் சட்டை செய்யாமல் நேராக ஆய்வாளர் அறைக்கே சென்றுவிட்டோம்.
"ஸார் வணக்கம்",என்றோம் கோரஸாக! "சொல்லுங்க" என்றார் காட்டமாக. உட்காரச்சொல்லுவார் என்று சினிமாவில் வருவதுபோல எதிர்பார்த்தோம். இருபத்து சொச்ச வயதிற்கு அவர் கொடுத்த அந்த மரியாதையே அதிகம் என பிற்பாடு தெரிந்தது. முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு. "ஸார் இவன் என் ஃபிரண்டு, சினிமால இருக்கான். பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணனும், அங்க சர்டிபிகேட் கேட்டாங்க, தொலைஞ்சுபோச்சு, ஸ்கூல்ல கேட்டா தொலைஞ்சு போனதா ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து ஒரு ரிசிப்ட் வேனும்னாங்க, அதான் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு..." என்றேன். இந்த துக்கடா கேஸுக்கு இன்ஸ்பெக்டரிடம் நேரடியாக சென்றது கோபத்தின் உச்சத்திற்கு சென்றிருக்கவேண்டும். அதை காட்டிக்கொள்ளாமல், "எப்போ காணாம போனது?" என்று மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விட்டார். எங்களை அடித்துவிடக்கூடாது என்று அரை வினாடியில் ஒரு பிராணயாமம் செய்திருக்கக்கூடும். நண்பனை ஒருமுறை பார்த்துவிட்டு "ஆறு வருஷம் முந்தி ஸார்" என்ற என் பதிலுக்கு சாதாரணருக்கே உடனடி ரத்த அழுத்தம் ஏறியிருக்கும். இன்ஸ்பெக்டர் முகம் செக்கச்செவேல் என்றானது. எங்களிருவரையும் மாறிமாறி பார்த்தவர், "முடியாது, தொலஞ்சு போய் ஒரு மாசத்துக்குள்ள இருந்தாத்தான் கம்ப்ளைன்ட் கொடுக்கமுடியும். ஸோ, நீங்க கிளம்பலாம்" என்றார் கூரான பார்வையில். நண்பனிடம் எப்படியாவது ரிசிப்ட் வாங்கிவிடலாம் என்று வாக்குறுதி கொடுத்த என் தன்மானம் விடவில்லை. கொஞ்சம் பொங்கியது. "இல்லை ஸார் எப்படியாவாது வாங்கணும், என்ன பண்ணா வாங்கலாம். இல்லை மேல்முறையீடு ஏதும் பண்ணனுமா?" என எஸ்.ஏ.சி படங்களில் கற்ற சட்ட நுணுக்கங்களை பிரயோகம் செய்தேன். மேற்கொண்டு கேள்வி எதுவும் கேட்க சந்தர்ப்பம் கொடுக்காமல் த்ரீ நாட் செவனை அழைத்தார். அதற்குப்பின் 307 ரைட்டரிடம் கூட்டிச்சென்று விசாரித்தார். "ஏப்பா, இத முன்னாடியே சொல்லக்கூடாதா? ந்தா, எஸ்.ஐ இருக்காப்ல, முதல்லயே அவரை பாத்திருந்தா எல்லாம் முடிஞ்சிருக்குமில்ல. இப்ப பாரு நேரா ஐயாவை பாத்துட்ட, இனிமே கொடுத்தா என்ன,ஏதுன்னு எங்களை நோண்டுவாரு, சிறு பிள்ளைங்கன்றது சரியாப்போச்சு" என்றதும், என்னுடைய பெரியமனுஷ தோரணை இழுத்து முடித்த சிகரெட்டை பூட்ஸ் காலுக்கடியில் நசுங்கியது போலானது!. கிளாஸ் மேட் கிள்ளி வைத்ததற்கு பிரின்சிபாலிடம் கம்ப்ளைன்ட் கொடுத்த கதையானது. நொந்துபோய் வெளியே வந்து, ஊர்த்தலையாரியிடம் விஷயத்தை சொன்னதும் முன்நூறு ரூபாயில் அத்தனை காரியத்தையும் துல்லியமாக முடித்துக்கொடுத்துவிட்டார். இதில் உச்சபட்ச வேடிக்கை என்னவென்றால், எங்கள் உடுப்பை பார்த்து விஜிலென்ஸ் ஆட்கள் என்று நினைத்துத்தான் உத்தமமாக காட்டிக்கொண்டு எங்களை வெளியேற்றினாராம் அந்த இன்ஸ்பெக்டர். கடைக்கு ரெகுலராக வரும் ஒரு ஏட்டையா சொன்னார். நாங்கள் வாங்கித்தரப்போகும் ஒரு குவாட்டருக்காக அப்படி சொல்லியிருக்க முடியாது. ஏட்டையாவுக்கு குடிப்பழக்கம் இல்லை. அன்றைக்கு வழக்கத்தை விட ஒரு பீர் சேர்த்துவாங்கி அணை சென்று வானத்தைநோக்கி சத்தமாக சிரித்தபடி, நுரை வழிய வழிய குடித்தோம்!
 

Comments

Popular posts from this blog

அறிமுகம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!