ஏன் போனான்..ஏன் வந்தான்...

ராஜம்மாள் அத்தை பூவே பூச்சூடவா பத்மினியை நினைவு படுத்துவதாக இருப்பார். கணவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர். இரண்டு பிள்ளைகள் பெற்றெடுப்பதற்கு மட்டும் தன் பங்களிப்பை ஆற்றிவிட்டு ஆற்றோடு போய்விட்டார். மூத்தது பிரேமா சித்தி, இளையவர் ஆனந்த கணேசன். ஆனந்த கணேசன் அந்த தெரு பெண்களே ஆனந்தப்படுமளவு சுதாகர் போல கிப்பி வைத்து செக்கச்செவேலென்று இருப்பார். அவர் வீட்டில் எந்நேரமும் வானொலியில் இலங்கை,திருச்சி, அல்லது ஏதேனும் ஒரு ஒலிபரப்பில் காதல் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். இருந்தும், லீலைகள் புரியாத கிருஷ்ணன். பிரேமா சித்தி கல்யாணம் செய்துகொண்டு புருஷன் வீட்டிற்கு செல்லவும், ஆ.கணேசனை வீட்டிற்கு சென்று பார்க்க சாக்கு கிடைக்காமல் தெருப்பெண்கள் திண்டாடினார்கள். கையில் சிறுகுழந்தைகளான எங்களைப்போன்றவர்களை தூக்கிப்பிடித்து ஆ.க வீட்டின் முன் வயசுப் பெண்கள் மாவு இல்லாமல் கோலம் போடுவார்கள். இருபது வயது பூர்த்தியடையாத நிலையில் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் ஆ.க. காணாமல் போனார். அன்றிலிருந்து பித்துப்பிடித்தது போல இருந்தார் ராஜம்மாள் அத்தை. பத்து பதினைத்து வருடங்கள் ஆனது. எப்போதாவது யாராவது அங்கே, இங்கே பார்த்ததாக சொல்வதுண்டு. அதை நம்பி களைஎடுத்து கூலிக்கு போய் சம்பாதித்த சொற்ப காசை வைத்து, சம்பளம் கொடுத்து ஆளனுப்பி பார்த்துவரச்சொல்வார் அத்தை. வாங்கிய காசை ஆட்டையை போட்டு கிடைக்கவில்லை என எப்போதுமான பதிலை வந்து சொல்வார்கள். பல வருடங்களுக்குப்பின் ஊரில் அதிகம் படித்த ஒரு புண்ணியவான் செய்த புண்ய காரியத்தில் அத்தைக்கு பென்ஷன் வர ஆரம்பித்தது. அதுவரை எட்ட இருந்த சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சம் வர ஆரம்பித்தனர். என் வயதொத்தவர்கள் எல்லாம் வெளியூருக்கு சென்று வேலை பார்த்து ஊர் திரும்பும் ஒரு நன்னாளில் ஆ.க வீடு திரும்பினார். ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. அத்தைக்கு சொல்லமுடியாத மகிழ்ச்சி. வந்த அன்று இரவு எங்கள் வீட்டில் தான் தங்கினார். அதே போல் தான் கிப்பி வைத்து இருந்தார் அடையாளத்தில் பெரிய மாற்றமில்லை. இத்தனை நாட்கள் எங்கிருந்தார் என்கிற எங்கள் கேள்விக்கு முன்பே சினிமாவில் முயற்சி செய்ததாக சொல்லிவிட்டார். நான் கூட சென்னையில் இருந்தபோது சினிமா நண்பர்களுடன்தான் தங்கியிருந்தேன் என்றதும் பொத்தாம் பொதுவாக சிரித்து வைத்தார். எங்களை அதிகம் பேசவிடாமல் சில தன்னிலை விளக்கங்கள் கொடுத்துவிட்டார். எல்லோரும் கலைந்த பின் நானும் அப்பாவும் பேச்சுக்கொடுத்தோம். சென்னையில் எங்கு தங்கியிருந்தீர்கள் என்று நான் கேட்ட கேள்விக்கு சிரித்தார். பதிலில்லை. அப்பாவும் சில கேள்விகள் கேட்டார் அதற்கும் பதிலில்லை. சிரித்தார். எங்களின் வாயசைவிற்கு பின் ஒரு பதிலை சொன்னார். "எனக்கு இப்போ காது கேக்கறதில்லை மாமா, அங்கிருந்தப்போ ஒரு நாளைக்கு ஒரு வாட்டி சாப்பிடறதே பெரிய விஷயம். அந்த பழைய ஸ்டெமினா எல்லாம் இப்போ இல்லை மாமா" என்றார். 

ஆனந்த கணேசனுக்கு காது கேட்காமல் போனது யாருக்கும் வருத்தமில்லை. குறிப்பாக ராஜம்மாள் அத்தைக்கு. இதற்கு முந்தைய தொழிலாக சினிமாவில் சுற்றித்திரிந்திருந்தாலும் ஒரு தையல் கடையில் வேலை செய்திருப்பதாக சொன்னதும், அத்தை கணேசனுக்கு ஒரு தையல்மெசினும் ஒரு கடையையும் ஏற்பாடு செய்தாள். சில மாதங்கள் கடை,வீடு என அழகாக சென்றன. கிட்டத்தட்ட நாற்பது நெருங்கிய நிலையில் இருந்தவருக்கு திருமணம் செய்துவைக்க அத்தை விரும்பினாள். தன் மகளின் மகள்கள் இருவரில் ஒரு பெண்ணுக்குத்தான் திருமணம் ஆகியிருந்தது. அக்காள் பிரேமாவின் கணவன் ஒரு குடிகாரர். அவரும் தையல்காரர்தான். தன்னுடைய இளைய பெண்ணை மைத்துனனுக்கு கட்டிவைக்க அவர் முடிவு செய்ததை அக்கா பிரேமா விரும்பவில்லை. இருவருக்கும் இருபதுவருட வித்தியாசம். எந்த தாய்க்குத்தான் பெண்ணை அப்படி திருமணம் செய்துவைக்க மனசு வரும்? ஆனால், அதை மைத்துனன் ஒரு பஞ்சாயத்தாக கூட்டி ஊர்ப்பெரியாவர்களிடம் நியாயம் கேட்டார்.
இந்த வயதில் வேறெவரும் பெண் தர மாட்டார்கள் என்பதால் வலுக்கட்டாயமாக இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார்கள். அவர்கள் இல்லறமும் ஓரளவு இனிதே நடந்தது. ஒரு பையன் பிறந்தான். எல்லோருக்கும் கொள்ளை மகிழ்ச்சி. சொந்தம் விட்டுப்போகாமல் ஒன்றானதில் அத்தை பூரிப்புடன்தான் இருந்தாள். பென்ஷன் பணத்தின்மேல் ஒரு லோன் போட்டு வீட்டை விஸ்தீரணம் செய்தார்கள். வீட்டு வேலை முடிந்ததும் ஒரு திருவிழாவிற்கு மனைவியை அக்கா வீட்டிற்கு அனுப்பியிருந்தார் கணேசன். மனைவியை அழைத்துவர ஒரு நாளில் பேருந்தில் கிளம்புகையில் பாதிப்பயணத்தில் நெஞ்சைபிடித்து அமர்ந்தவர் அப்படியே அமரரானார்.
சுகர், பிரஷர் என அவர் உடல்நிலை பின்னாளில் அவர் உபயோகம் செய்த மாத்திரை அட்டைகளை பார்த்ததும்தான் பலருக்கு தெரிந்தது.
எப்படியோ தகவல் தெரிந்து ஊருக்குள் கொண்டுவந்தாயிற்று. எதற்கு ஊரைவிட்டு போனான்? எதற்கு ஊருக்கு வந்தான் என எல்லோருக்கும் ஒரு பச்சாதாபம் எழுந்தது. ராஜம்மாள் அத்தை எதுவும் பேசவில்லை. வெளியூரிலிருந்து ஆட்கள் வந்திருந்தார்கள். அன்றைக்கென ஊரில் இரண்டு மூதாட்டிகள் இறந்திருந்தார்கள். கிராமம் ஆதலால் அனைத்து அடக்க காரியங்களையும் உள்ளூரிலேயே சொந்த ஆட்கள் தான் முடிப்பார்கள். இரண்டு மூதாட்டிகளை அடக்கம் செய்துவந்த ஆட்கள் கொஞ்சம் பரிதாபத்தோடு ஆ.கணேசனை அடக்கம் செய்தார்கள். இடுகாட்டுக்கு போய்வந்த கையேடு வெளியூர் நபர்கள் சென்றுவிட்டார்கள். மாலை நேரம் சோர்வாய் படுத்திருந்தார் அத்தை. அவர் கண்ணில் கண்ணீரே இல்லை.
இரவு சாப்பாட்டுக்கு அத்தையை எழுப்பும்போதுதான் தெரிந்தது. அத்தை எப்போதோ உயிரை விட்டிருந்தாள். வெளியூர் சென்றவர்களிடம் பாதிப்பயணத்தில் தகவல் சொன்னதும் அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. நீங்களே அடக்கம் செய்துவிடுங்கள் என்று பயணத்தை தொடர்ந்தார்கள். அடக்கம் செய்ய ஆட்கள் சிரமப்பட்டனர். ஒரேநாளில் நான்கு பிரேதங்களை கண்டவர்கள் அல்ல அவர்கள். இனி அந்த வீட்டில் இருப்பது அத்தனை உசிதமல்ல என எண்ணிய பிரேமா சித்தி குடும்பத்துடன் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு இரவோடு இரவாக அவர் வாக்கப்பட்ட ஊருக்கு சென்றுவிட்டார். இரண்டுநாள் கழித்து நானும் அம்மாவும் போடி சென்றுவிட்டு மெயின்ரோட்டிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த சாலையில் இரண்டு பேர் அந்த துக்கம் விசாரிக்க வருவதாக சொன்னார்கள். பேசிக்கொண்டே ஊர் வரும்போது எனக்கு ஒன்று தோன்றியது! அவர்களிடமே கேட்டுவிட்டேன். "ஆமாம், துக்கம் விசாரிக்க வருகிறீர்கள் சரி! எவருமே இல்லாத வீட்டில் யாரிடம் விசாரிப்பீர்கள்?" என்றதும் ஒரு வினாடி துனுக்குற்றவர்கள் எந்த பக்கம் செல்வது எனும் குழப்பத்துடன் இரண்டு விநாடிகளை கடத்திவிட்டு என் கையை பிடித்துக்கொண்டே எங்களுடன் சேர்ந்து நடக்கத் துவங்கினார்கள்!

Comments

Popular posts from this blog

அறிமுகம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!