சிரி..சிரி...

அப்போது எடிட்டர் எல்.கேசவன் ஸார் அலுவலகத்தில் தங்கியிருந்தோம். என்னைத்தவிர இரண்டுபேர் உதவி இயக்குனர்கள். ஆர்.பி சௌத்ரி ஸார் சினிமாவை அப்போது மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தார். ஏராளமான புது இயக்குனர்கள் வந்தார்கள். ஆனால் அனைவரும் விக்ரமனின் கார்பன் பிரதியைப் போலவே ஒரே கதையுடன்தான் காவேரி ரங்கன் தெருவில் இருந்த எஸ்.பி.சௌத்ரி அலுவலகத்தில் தங்கியிருப்பார்கள். அப்போது அருணாச்சலம் ஸ்டுடியோவில் கண்ணங்கரேர் என்று இருந்த ஒரு இயக்குனர் ஒரு பிரபு படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அவரின் உதவியாளன் மது எங்கள் அறையில் தங்கியிருந்தான். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்றபோதுதான் அப்போதைய என் கனவுக்கன்னி(?!) தேவயாணி நடித்துக்கொண்டிருந்தார். இயக்குனரை பார்த்தால் ஒருவரும் நம்ப மாட்டார்கள். கருப்பு உருவத்தில் மிகக்கருப்பு நிறத்தில் உடையணிந்திருப்பார். ஆள்தான் அப்படியே தவிர, அவரது பின்புலம் கே.எஸ்.ரவிகுமார் சார் பட்டறை என தெரிந்தது. "நாட்டாமை" திரைப்படத்தின் காமெடி ட்ராக் அவர் எழுதியது என்று சொன்னார்கள். பிரபலமான காமெடியாயிற்றே! தமிழ் சினிமாவில் சேகுவேராக்கள் பஞ்சமே இல்லை. சாப்ளின்கள் தான் குறைவு. காமெடி சென்ஸ் உள்ள நபர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். அவரது பொன்மனம் படத்தில் ஒரு சீன். கதாநாயகனுக்கு அடிபட்டுவிடும். பிரியா ராமன் டக்கென குனிந்து துணியை கிழிப்பார். இதற்கு முந்தைய படங்களில் கதாநாயகி குனிந்து தன புடவையை கிழித்து கதாநாயகனுக்கு கட்டு போடும் காட்சிதான் நம் நினைவுக்கு வரும். இந்த காட்சியும் அப்படியே தான் இருப்பதுபோல இருக்கும் பிரபு உடனே "அட எதுக்குங்க புடவையை கிழிச்சுக்கிட்டு" என்பார். அதற்கு பி.ராமன் "இன்னிக்கி வெள்ளிக்கிழமை புடவையை கிழிக்கக்கூடாது அதான்..." என்று பிரபுவின் வேட்டியை கிழித்து காண்பிப்பார். அதற்குப்பின் நான்கைந்து காமெடி படங்கள் இயக்கினார்எஸ்.பி ராஜ்குமார். வடிவேலுவின் "செத்து செத்து விளையாடுவமா" அவர் ட்ராக்தான். நகைச்சுவை உணர்வுடன் இயல்பாக காட்சிகளை வைப்பவர்கள் ஒருவகை. வலியத்தினிப்பவர்கள் ஒருவகை. சமீபத்தில் நண்பர் நந்தன் ஸ்ரீதரன் சொன்ன ஒருகதையும் அப்படி இயல்பாய் சிரிக்க வைத்தது. வடபழனியை சுற்றி ஓராயிரம் க்ரியேட்டர்கள் அட்டகாசமான கதையை சுமந்தபடி அலைகிறார்கள். என கனவுக்கன்னி தேவயாணி நடித்த அந்தப்படத்தில் ஒரு மொட்டை வில்லன் வெளிநாட்டு காரில் வந்து இறங்குவான். ஷூட்டிங் முடிந்ததும் அவர் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் எங்கள் அறைப்பக்கம் வந்து ஒரு மூலையில் படுத்துக்கொள்ள சம்மதம் கேட்பார். இப்படி விசித்திரங்களை சுமந்தபடி இருக்கும் சினிமா கிரியேட்டிவிட்டி கிலோ என்னவிலை எனக்கேட்பவரைக்கூட ஸ்கோடா காரில் அனுப்புகிறது நிஜ வாழ்க்கையில்.

Comments

Popular posts from this blog

அறிமுகம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!