மனநலம்

உங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியரை எப்போதாவது மனநலம் தவறியவராக பார்த்திருக்கிறீர்களா? அதற்கான சாத்தியங்களுடன் தான் இந்த சமூகம் இருக்கிறது          -  ---வண்ணதாசன்.

பேருந்தில் உடன் பயணித்த அந்த நடுத்தர வயதுக்காரர் தான் இப்போது அடைக்கலமாகியிருப்பது இமையமலையில் என்றார்.”அங்கு சென்று எழுபது வருடங்கள் ஆகிறது என்றும் இப்போது தனக்கு ஐம்பத்தெட்டு வயதாகிறதும் என்றார்.
புத்தி பேதலிக்காமல், உடுப்பை கிழித்துக்கொள்ளாமல் தினம் தினம் ஷவரம் செய்து புது உடுப்பு போட்டுக்கொண்டும் எழுதப்படிக்க தெரிந்தும் இந்த பேருந்து இந்த இடத்திற்கு செல்கிறது, எந்த நிறுத்தத்தின் பின் தான் இறங்கவேண்டும் எனும் குறைந்த பட்ச பிரக்ஞையுடன் ஆனால் எப்போதோ அல்லது ஏதோ ஒரு காலத்தில் தன் மனதை மனதின் செயல்பாடுகளை உறைய வைத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது..
இந்த நிலையிலிருந்து அவர் மீளவிரும்பவில்லையா அல்லது எப்படிப்பிழைத்தாலும் அந்த வயதிற்குப்பின் இந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது எனும் முன் அனுமானத்துடன் இருக்கிறாரா எந்த்தெரியவில்லை.அடுத்த விநாடி பற்றிய நிகழ்வில் அல்லது பொருப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத விட்டேத்தி மனநிலை அல்ல இது என்பதுமட்டும் புரிகிறது.

எதனுடனும் தன்னை பிணைத்துக்கொள்ளாத இந்த மூன்று பேர் பட்டியலில் குழந்தையாக இனி மாறவே முடியாது, ஞானி மனோநிலைகளை எட்டுவதும் அத்தனை சுலபமில்லை.ஆனால் தன்னை ஒரு மனம் பிறழ்ந்தவனாக ஆக்கிக்கொள்வது நம்கையில் இல்லை என்றாலும் சுலபமாக நடந்துவிடுகிறது. அல்லது நிகழ்த்திவிடுகிறது இச்சமூகம்.

பள்ளி நாட்களில் எல்லோரையும் வயிறு குலுங்கச்சிரிக்கவைத்த வகுப்புத்தோழன் கனகராஜை அப்படித்தான் சிலவருடங்கள் முன் பார்த்தேன். அறிவியல் வாத்தியாரின் அடியை பொறுக்கமுடியாமல் வாங்கி பிரம்படி தாங்கிய உள்ளங்கையை எல்லோருக்கும் காட்டியபடி ஆசிரியரைப்போல் நடித்துக்காட்டி தன் வலி போக்கி சக மாணவர்களை சிரிக்கவைத்த கனகராஜ் ஏன் இப்போது இப்படி ஆனான். காகிதக்குப்பைகளையும், காலவதியான ஒரு எழுத்தாணியையும் சட்டைப்பையில் திணித்துவைத்து ஏதோ ஒரு அதிகாரி பேசும்தொணியில் அலையும் கனகராஜின் அண்ணன் ஒரு அஞ்சல் அதிகாரி. அந்த சின்னஞ்சிரிய கிராம்த்தில் எப்போதோ யார்க்கோ வந்த அஞ்சல் பணத்தை திருடியதற்காக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அவர் இப்போது கனகராஜைப்போல் அக்கம் ஊர்களிலெல்லாம் புன்னகைத்தபடியேதான் சுற்றுகிறார்.

இப்போதெல்லாம்அன்றாடம் நடைபயில செல்லும்போதோ யாருமற்ற தெருவிலோ சில நிமிடங்களாவது ஒரு பைத்தியத்திக்காரனாய் மகிழ்ந்திடத்தோன்றுகிறது. அப்படி நடக்காத நாளில் பைத்தியம் பிடித்ததைப்போன்று இருக்கிறது. இந்நிமிடம் நான் நல்ல உடுப்போடுதான் சுற்றுகிறேன் ஆனால் என் உதட்டில் உறைந்திருக்கும் இந்த புன்னகைக்கு  நீங்கள் நதிமூலம் பார்க்கத்தேவையில்லை. 

Comments

Popular posts from this blog

அறிமுகம்

நிழற்படம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!