நிழற்படம்

முப்பத்தாறு நிழற்படங்கள் பதியக்கூடிய ஃபில்ம் சுருளை உங்கள் கேமராவில் லாவகமாக பொருத்தி, பின்மூடியை அழுத்தி மூடி புகைப்படம் எடுப்பதற்கு தயாராகிறீர்கள்.அதன் லென்ஸுக்கு அப்பால் உங்களுக்கு முன் காட்சிகள் விரியத்தொடங்குகின்றன. அக்காட்சிகளை உங்கள் கைக்கேமராவுக்குள் அடக்க உங்கள் ஆர்வம் பீறிடுகிறது. சுற்றியுள்ள அனைவரும் உங்களை பெரும் புகைப்படக்கலைஞனாக மதித்து அவர்களின் நிழலைத்தர முன் வருகிறார்கள்.
இப்போது அதன் ஷட்டர் மூடியை கழட்டி உங்கள் கண்களுக்கு மிக அருகில் அதன் குவிக்கண்னாடியை பதிக்கிறீர்கள் முதலில் மங்கலாக பின் அதன் குவிலென்ஸை திருகத்திருக காட்சிகள் ஸ்தூலமாக விரிகின்றன். ஃபில்ம் சுருள் சுழல்வதற்கு முந்தைய கட்டத்தில் உங்கள் ஷட்டர் விலக்கப்பட்டு,அதனுள் நீங்கள் பொதித்த பலம் பொருந்திய மின்கலங்கள் கொடுத்த சக்தியில் அவ்வறையெங்கும் மைக்ரோ செகண்ட் பரவிய வெளிச்சத்தில் எதிரில் இருக்கும் பிம்பம் அதன் பசை தடவிய நாடவில் பதிகிறது, புகைப்படம் 1 என பதிந்த அந்த காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே?

சுருட்டிவிக்கப்பட்ட அதன் குடுவயிலிருந்து இன்ச் இன்ச்சாக நீளம் வெளிவர வெளிவர இப்போது உங்கள் நினைவுகள் பின்னோக்கி சுருள்கிறது.

உங்கள் முதல் புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த நாள் நினைவிருக்கிறதா?

பிறந்த மூன்று மாதம் வரை நீங்கள் குப்புற விழவில்லை, அதன் பின் ஒரு மஞ்சள் நாளில் யாரும் கவனிக்காமல் விட்ட, அல்லது உங்கள் அம்மா வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அப்பாவின் பழைய வெள்ளை வேட்டியில் விட்டத்தைப் பார்த்து, அங்கு சுழலும் காவி நிற மின்விசிறியினைப் பார்த்து ”ங்ஙா.. ஞா..ய்ய்”  என்று எச்சில் வழிய ஒப்பித்துக்கொண்டே நகர்ந்து நகர்ந்து வந்து குப்புற விழுந்துவிட்டீர்கள். எதேச்சையாக கவனித்த அத்தை அம்மாவிடம் சொல்லி குப்புற விழுந்ததை ஒரு விஷேசம் போல மகிழ்ந்தது நினைவிருக்கிறது தானே?
மறுநாள் அப்பா வந்ததும் குளிப்பாட்டி கன்னத்தில் கண்மையை ஈஷிக்கொண்டு பாட்டியோடு ஸ்டுடியோ சென்று இன்னும் வளராத கன்னிமுடிகளை திரும்பவும் படியவாரி குப்புற படுக்கவைத்து புகைப்படக்காரரிடம் “நல்லா எடுங்க” எனச்சொல்லி எடுத்த உங்கள் வாழ்வின் முதல் புகைப்படத்தில் சரியாக வளராத புருவத்தையும் இல்லாத முன் முடிக்கற்றைகளை புகைப்படஓவியரிடம்வரைந்து கொடுக்கச்சொல்லி  பெரிதாக்கி வண்ணச்சட்டங்கள் போட்டு படுக்கையறை தலைவாசலுக்கு மேல் மாட்டிவிடப்பட்ட அந்த புகைப்படம் இப்போது பழுப்பேறி இருக்கும்தானே?

சரி முதல் புகைப்படம் எடுத்தாயிற்று. உங்கள் வலதுகை கட்டைவிரல் அந்த மேனுவல் கேமராவின் பற்சக்கரங்களை நகர்த்தி அடுத்த காட்சிக்கு தயாராகிறது.சுவற்றிலோ திரையிலோ வரைந்து வைத்த ஆயத்த இயற்கைக்காட்சிகள் பின் புலத்தில் இருக்க,நீங்கள் அம்மாவின் இடுப்பிலோ அல்லது ஒரு சிறிய சாய்வு நாற்காலில் கால் மேல் கால் போட்டுஅமர்ந்தோ, கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துக்காரராக இருந்தால் மரக்குதிரையிலோ அமர்ந்து எடுத்த அந்த குடும்பப் புகைப்படம் எடுக்கப்போன அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது என்று நினைவுக்கு வந்துவிட்டதா?
                                                                                               (”க்ளிக்”குவோம்!)

Comments

Popular posts from this blog

அறிமுகம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!