தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!






உங்கள் மேனியில் மின்னும் தங்கம். ஒரு இருண்ட பகுதியில் இருந்துதான் வருகிறது.

முன்பெல்லாம் வீட்டில் ஏதேனும் வைபவம் என்றால் நகை எடுக்க நகைக்கடை செல்லமாட்டார்கள். பொன்னாசாரிகளிடம் நேரடியாக தங்கமோ, அதற்கினையான சந்தைமதிப்பில் பணமோ பொருளோ, அல்லது அதனுடன் கொஞ்சம் பழைய தங்கமோ கொடுத்து விருப்பத்திற்கேற்ப நகைகளை செய்யச்சொல்லி கொடுத்துவிடுவாரகள். இன்றைக்கும் சில வீடுகளில் இம்முறையை பின்பற்றுகிறார்கள்.
இதில் அவரவர் நம்பகத்தன்மை, நற்பெயர்க்கேற்ப செம்பு வெள்ளி கலப்பார்கள். குறைந்தபட்சம் எட்டு விழுக்காடு அதிகபட்சம் பதினைந்துவிழுக்காடு செம்பு, வெள்ளி இதர வேதிப்பொருட்கள் கலப்பார்கள். கடைசியில் கிடைக்கும் ஆபரணத்தங்கத்தின் மதிப்பு கலந்தவைகளை கழித்தால் கிடக்கும் சதவிகிதமே. அதாவது இப்போது கடைகளில் கிடைக்கும் 916 என்பது 91.6 சதவிகிதம் 92 சதவிகிதம் வரை செய்யலாம். இந்த எட்டு விழுக்காட்டில் தோராயமாக அரை விழுக்காடு தவிர மீதி துகள்கள் குப்பைகளில், மெஷின்களில், பயன்படுத்தும் அரம் உள்ளிட்ட பயன்பாட்டுக்கருவிகளில், சட்டையில் என ஒட்டியது அனைத்தும் எடுத்துவிடுவார்கள். அவர்கள் உபயோகிக்கும் சில வேதிப்பொருட்கள், எந்திர செய்முறை செலவு போக அனைத்தும் அவர்களுக்கு லாபம். அதாவது குறைந்தபட்சமாக நூறு கிராம் தங்கத்தின் வேலையில் ஏழறை கிராம் தங்கம் லாபம். இதுபோக செய்கூலி என்று தனியாக ஒரு சிட்டை போடுவார்கள். உத்தேசமாக நூறுகிராம் தங்கத்தின் வேலைப்பாடு நான்கு நாட்களில் முடிந்துவிடும். தங்கத்தின் அப்போதைய சந்தை நிலவரத்தைக்கொண்டு அவ்ர்களது லாபத்தை கணக்கிடலாம்.

ஒரு உமியோடு, கொஞ்சம் மண் குவைகள், மெழுகு, சவனம், படுகார், கத்தரி, சிறுசுத்தியல், திம்மை எனும் ஒரு சிறிய இரும்புராடு, குப்பை,(dustஅல்ல) இரண்டு வளைகுழல்கள், ஒரு சீனாதட்டு, பித்தளைமயிர்கள் கொண்ட ப்ரஸ்., மற்றும் சில நுட்பமான அரங்கள். இவை ஆயிரம் இரண்டாயிரத்தில் அடங்கிவிடும். இதை வைத்துக்கொண்டு ஒரு பட்டறை போட்டு நீங்கள் விரும்பிய வடிவத்தில் நகை செய்யலாம். சொக்கத்தங்கம் என்றால் நமச்சாரம், வெங்காரம், போன்ற  வேதிப்பொருட்களுடனும், பழைய அழுக்கு சேர்ந்த நகைகள் என்றால் கொஞ்சம் அதனுடன் கழிக்கம்  சேர்த்து ஒரு மண்  குவையில் போட்டு, உமியோட்டில் வைத்து ஒரு மெல்லிய வளைந்த ஊதுகுழலில் ஊதிஊதி  உருக்கி வார்ப்புப்பலகையில் தண்ணீர்போல ஊற்ற, ஒரு விரல் அல்லது பென்சில் அளவிற்கு அது வந்திருக்கும்.  அதை வார்ப்பு மெஷினில் மாற்றி மாற்றி கொடுத்து நீளமான யானை முடி வடிவத்திற்கு ஒரு நீண்ட கம்பியைப்போல் ஆக்கி அதன் பின் அதை தட்டையாகவோ சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெப்பக்காற்றில் ஊதி உருண்டைகளாகவோ இரண்டு கம்பியை ஒன்றாக முறுக்கி வளைத்து சங்கிலியாகவோ செய்வார்கள். மனிதர்கள் செய்யும் நகைகளில் உயிர் இருப்பதாக நம்புவார்கள் சிலர். அது அவரவர் மனம் சார்ந்தது. ஒரு உலோகத்தை யார் கையாண்டால் என்ன? வடிவம் கிடைத்தால் போதாதா?
பண்ணாட்டு முதலாளித்துவ நிறுவனங்களின் வரவாலும், தங்கத்தின் விலை ஏற்றத்தாலும் பொதுமக்களுக்கு நகைகளை விற்பதில் உள்ள சவால்கள் அதிகமாயின. சொல்லப்போனால் தங்கத்தின் விலை அதிகமானதில் இந்நிறுவனங்கள் கம்மாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தினை டன் கணக்கில் பதுக்கிவைத்தது ஒரு முக்கிய காரணம். நவீன, கணினி மயமாக்கப்பட்ட உபகரணங்கள், மூலம் புதுப்புது டிசைன்களை உற்பத்தி செய்கிறார்கள். சரி, கனினி ஒன்று போதுமா? என்னதான் கனினி டிசைன் செய்துகொடுத்தாலும் அதை எக்சிகியூட் செய்ய ஒரு ஆள் தேவையல்லவா? கிராமங்கள் தோறும் பத்தாம் வகுப்பு, எட்டாம்வகுப்பு முடித்த ஏழை மாணவர்களை சொற்ப சம்பளத்தில் பிடித்து உற்பத்தியின் பல அடுக்குகளில் உள்ள எளிய வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கை வேலை என்றால் அதில் சில தொழில் சூட்சுமங்கள் இருக்கவேண்டும் அல்லவா? அவற்றிற்கு ஒரு பாரம்பரியமான பட்டறையில் நீண்டகாலம் பனிபுரியும் ஒரு தேர்ந்த வேலைக்காரரை அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கொடுத்து கிரியேட்டிவிட்டி வேலைகளுக்கு சில சூட்சுமங்களை கையாள வைத்துக்கொள்கிறார்கள்.
  
இப்போது தொலைக்காட்சி விளம்பரங்களில் முன்னனி கதாநாயகர்கள் சிபாரிசு செய்யும் பெரிய நகைக்கடையில் வாங்கும் நகைகளின் தரம் எப்படியிருக்கிறது?  
தரம் என்று பார்த்தால் எல்லா நிறுவனங்களும் ஒரேபோலத்தான் இருக்கிறது. அவர்களின் முக்கிய நோக்கம் உங்களை அவர்களின் நிரந்தர வாடிக்கையாளராக்குவது மட்டுமே. அவர்களின் கையிருப்பு ஒரு டன் என்றால் அவற்றை முழுதும் உங்களிடம் விற்றுவிட்டு,பின் விற்ற பழைய  நகைகளை உங்களிடமிருந்து பெற்று (விளம்பரங்களில் பழைய நகைகளை உபயோகிப்பது அவுட் ஆஃப் ஃபேஷன் எனும் கருத்தை வலியுருத்துவதைப் பார்க்கலாம்; உம்: போன வாட்டி ஒரு ஃபங்க்‌ஷனுக்கு போட்டுட்டு போன நகையை திரும்ப எப்படித்தான் போடுவதோ?) திரும்ப மறு சுழற்சி முறையில் வாங்கி, விற்று லாபம் பார்ப்பதுதான் அவர்கள் நோக்கம்.

எல்லா பெரிய நகைக்கடைக்காரர்களும் சொந்தமாக நகை உற்பத்தியில் ஈடுபடுவது இல்லை. கோவை மதுரை சேலம் காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பெரிய நகைப்பட்டறைகளுக்கு ஆர்டர்கள் வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்தியா முழுதும் தமிழகம் மற்றும் கேரளா கொல்லர்கள் செய்யும் நகைகள் அதிகம் விற்கப்படுகிறது. காரணம் செய்நேர்த்திதான்.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரை கோவை(காந்திபார்க்), மதுரை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் லட்சக்கனக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பெரிய நகரங்களில் இயங்கும் கார்பொரேட் நிறுவனங்கள் உங்களுக்கு அளிக்கும் சலுகைகளின் பின் ஒரு நகைதொழிலாளியின் வியர்வை மட்டுமல்ல, அவனது ரத்தம் ஒரு இடைத்தரகனுக்கு இரண்டு சதவிகிதம் சென்றபின்னரே உங்கள் கழுத்துக்களில் அது மிளிர்கிறதா மிரள்கிறதா எனும் உண்மை ஒளிந்திருக்கிறது. உபயோகிப்பவருக்கு அதன் சூட்சுமம் புரியாமல் அதன் டிசைனை சிலாகிப்பார்கள். தங்கத்தை வாங்குவதும், சில நாட்களில் வடிவம் பிடிக்கவில்லை என மாற்றுவதும் செல்வந்தர்களுக்கு இயல்பாய் இருக்கலாம். அந்த எக்ஸேஞ்ச் முறைகளில்தான் சில நிறுவனங்கள் ஜொலிக்கின்றது.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நகை பட்டறைகள் எப்படி இருந்தன? எப்படி ஆர்டர்கள் வாங்கினார்கள், எப்படி வேலை வங்கினார்கள் என்பதற்கு நானே சான்று. என்பதுகளின் இறுதியில் கோவை காந்திபார்க்கில் மூவாயிரத்திற்கும் அதிகமான பட்டறைகள் இருந்தன. எட்டாம் வகுப்பு முடித்து இனி எனக்கு படிப்பு தேவையில்லைஎன வீட்டில் முடிவுசெய்து நகை பட்டறை வேலைக்கு அனுப்பினார்கள்.
கோவை காந்திபார்க் சலீவன் வீதியில் மக்காச்சோளம் போன்று வரிசையாக  ஒன்றுகொன்று நெருக்கியடுத்திருக்கும் பலஆயிரம் பட்டறைகளில் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார்கள். காலை ஆறுமனிக்கெல்லாம் எழுந்து எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஓனர் படுக்கையை மடித்துவைப்பது, தண்ணீர் சுடவைத்து குளிக்கத்தருவது, என அவரது உடமைகளுக்கான வேலையையும், நமது வேலையையும் ஒரு மணிநேரத்திற்குள்ளாக முடித்து ஏழுமணிக்கெல்லாம் பட்டறையில் குத்தவைக்கவேண்டும்.

முன்றுவேளை உணவும் ஓனர் வீட்டில்தான். நல்ல தரமான உணவுதான். தங்கத்தில் புழங்குவதால் அதன் துகள்கள் சட்டையில் ஒட்டியிருக்குமென்பதால் வெளியே அனுமதிக்கமாட்டார்கள். இரவு பண்ணிரண்டு மணி வரை, சிலசமயம் இரண்டு மணி வரைக்கும் கூட வேலை நடக்கும். எப்போது முடிந்தாலும் மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்து வேலை துவங்கவேண்டும். கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியின் சிறையில் அடைபட்ட வாழ்க்கை. ஊரில் எட்டுமணிக்கெல்லாம் கண்ணயர்ந்து பழகியதால் இந்த வேலை ஒரு அடக்குமுறையாகவே பட்டது. கிட்டத்தட்ட ஆர்டர்கள் கிலோ கணக்கில் வரும். நான்குநாட்கள் தொடர்ந்து என்னால் அங்கு இருக்க முடியவில்லை. ஒண்டிப்புதூரில் இருக்கும் சித்தப்பா வீட்டில் விட்டுவிடச்சொல்லி கெஞ்சியதும் விட்டுவிட்டார்கள்.  அங்கிருந்த நாட்கள் தண்ணீருக்கடியில் மூச்சடிக்க வாழ்ந்ததைப்போல் இருந்தது. எதற்காக என்னை அங்கு அப்பா அனுப்பினார், ஏன் படிக்கவைக்க முடியவில்லை, கஷ்டம் என்பதை உணரவைக்க அனுப்பினாரா என எதுவும் விளங்கவில்லை. அப்போது கிலோ கணக்கில் ஆர்டர் எடுத்து வேலை பார்த்த என் ஓனர்களைப்போல் பலரும் இப்போது பெரிய பெரிய கார்பரேட் நகைக்கடை வரவுகளால் வேலையின்றி வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள்.

செல்ல தொப்பையுடன் இறுக்கமான முகத்துடன் எங்களை மிரட்டி வேலை வாங்கிய சென்றாயல் அண்ணன் கூட இப்போது ஒரு தனியார் வங்கியில் அப்ரைசராக மேனேஜரின் மிரட்டலுக்கு கீழேதான் வேலை செய்கிறார்.

கிடைக்கும் முழு லாபத்தையும் தனக்கு மட்டுமே உரித்தாக்கி நல்ல கைவேலைக்காரர்களின் உழைப்பை உரிஞ்சிக்கொண்டு இருந்தவர்கள் அந்த பாவத்திற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்க்கள். எப்போதும்போல நேர்மையாக வேலை செய்பவர்கள் இப்போதும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  
இப்போதைய பொன்னாசாரிகளின் நிலமைக்கு இருபதுசதவிகிதம் வேண்டுமானால் பெருநிறுவங்களின் வரவு ஒரு காரணமாயிருக்கலாம். மீதி என்பது சதவிகிதம் அவர்களே தான் காரணம். 

எப்படி ஒரு ஓவியனின் மிகச்சிறந்த ஓவியத்திற்குப்பின் வரையும் காகிதமும், அது உருவாகும் விதம், வர்ணங்களும் அதை உருவாக்கி சரியான விகிதத்தில் வேதிப்பொருட்கள்சேர்த்து ஒரு புட்டியில் அடைக்கும் தொழிலாளி, அனில் உரோமங்களை நுட்பமாக எடுத்து அடுக்கி, சிறியதும் பெரியதுமாக ஒரு ப்ரஸ் எனும் வடிவம் கொணரும் தொழிற்காரன் இவர்களின் பங்களிப்பு அடங்கியுள்ளதோ அதே போலத்தான் நகைக்குப்பின்னும் நிறைய தொழிலாளர்கள் இருக்கிறார்கள். முதலில் ஒரு சுரங்கத்திற்குள் மூச்சடக்கி செத்து செத்து தினமும் தங்கம் கலந்த மண் துகள்களை வெளியில் குவிக்கிறானே, அவனிலிருந்தே தங்கம் தொடங்கிவிடுகிறது. அதைப்பிரித்தெடுத்து இறுதியில் காய்ச்சி வடிவமாக்கும் கடைசி தொழிலாளிவரை எத்தனையோ பேர்கள் அடங்கியிருக்கிறார்கள். இவற்றில் ஒரு சிறுபகுதிதான் ஆபரனத்தங்கம் செய்யும் கைவேலைக்காரர்கள்.    

பிரச்சினை என்னவென்றால், எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லாமல் எந்த உடல் உழைப்பும் இல்லாமல் ஒரு கூட்டம் நீங்கள் தங்கத்திற்கு கொடுக்கும் விலையில் இரண்டு சதவிதத்தினை பங்குபோட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், பெரிய நகைக்கடைகள் தங்கள் ஆபரணத்தேவைக்கு கொடுக்கும் ஆர்டர்கள் நேரடியாக பொற்கொல்லர்களிடம் செல்வதில்லை. அந்த ஆர்டர்களைப் பெறவேண்டுமானால் பொற்கொல்லர்கள் கையில் தங்கம் வாங்கி இருப்பு வைத்து வேலை செய்யும் திராணி வேண்டும். கிலோ கணக்கில் தங்கம் வாங்க அத்த்னை பணம் உள்ள வேலைக்காரகள் பெரும்பாலும் கிடையாது. இவற்றைப்பயன்படுத்தி கையில் காசு வைத்திருக்கும் எவரும் அந்த ஆர்டர்களைப்பெற்று இவர்களிடம் கைமாற்றிவிடுகிறார்கள். மொத்த சேதாரத்தில் வேலைக்காரர்களுக்கு மூன்று சதவிகிதம், ஆர்டர்களைப் பெற்றுத்தரும் இடைத்தரகர்களுக்கு இரண்டு சதவிதம்.ஆக, இதற்குமுன் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பினை பெரும்பாலான பொற்கொல்லர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சில முதலாளி பட்டறைக்காரர்கள் முழித்துக்கொண்டு வசதியாக செட்டிலாகிவிட்டார்கள். அவ்ர்களிடம் வேலைபார்த்த கைவேலைக் காரகள்தான் பத்தாயிரத்திற்கும் குறைவான சம்பளத்தில் எமரால்டு, டாடா போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரே ஆறுதல் அங்கு எட்டுமணி நேர வேலை மட்டும். (ஆர்டர்கள் அதிகமிருப்பின் ஓவர்டைம் உண்டு) இன்னும் சில சிறிய அளவில் பட்டறை போட்டு வேலைபார்த்து அன்றாடம் ஆயிரம் இரண்டாயிரம் என லாபம் பார்த்தவர்கள் இப்போது ஆர்டர்கள் ஏதுமின்றி வேறுவேலைகளுக்கு சென்றுவிட்டார்கள். எப்போதும் ஒரே போலத்தான் இருக்கும் என்று நம்பிய சிலர் திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தை தாங்க முடியாமல் குடிக்கு அடிமையாகி கடனாளியாகிவிட்டார்கள். அதுகுறித்து அவர்கள்தான் கவலைப்பட வேண்டுமே தவிர, வாடிக்கையாளர் அல்ல. எந்த கைவேலைக்கும் ஒரு சிரமமான நேரம் ஒன்று வரத்தான் செய்யும். அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யம் உள்ளது.

மொத்தத்தில் தங்கம் வாங்குவதும், அது இருந்தால் ஒரு பாதுகாப்பு என நவீன பொருளாதாரம் உங்களைப்பழக்கிவிட்டது. எந்த சந்தை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறதோ அதே சந்தை வரும் காலங்களில் பாதளத்திற்கும் கொண்டுபோக வாய்ப்புள்ளது. இந்த உலோகத்தின் மீதே அலட்டல் வேண்டாம் என இருக்கும்போது அதன் பல கட்டங்களில் ஒன்றான ஆபரணத்தங்கம் குறித்தும், அது உருவாகும் விதம்குறித்தும் இத்தனை அலட்டல் தேவையே இல்லாதது. ஏனெனில் எப்படிப்பார்த்தாலும் தங்கத்துடன் கலந்திருப்பது கொஞ்சம் ரத்தமும் வியர்வையும்தான்.


Comments

Popular posts from this blog

அறிமுகம்

நிழற்படம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!